NATIONAL

இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கெண்டு பிரதமர் பிலிப்பைன்ஸ் பயணம்

புத்ராஜெயா, பிப் 28- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிலிப்பைன்ஸ் குடியரசுக்கு மார்ச் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். நாட்டின் 10வது பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த நாட்டிற்கு அன்வார் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது பிரதமர் அன்வார் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டிணன்ட் ஆர். மார்க்கோஸ் ஜே.ஆர்.ருடன் சந்திப்பு நடத்துவார் என்று விஸ்மா புத்ரா அறிக்கை ஒன்றில் கூறியது.

பாதுகாப்பு, விவசாயம், ஹலால் தொழில்துறை, இலக்கவியல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு வழி உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தலைவர்களும் பேச்சு நடத்துவர் என்று அது தெரிவித்தது.

மேலும், இரு நாடுகளுடன் தொடர்புடைய வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்களும் இவ்விரு தலைவர்களின் சந்திப்பில் இடம் பெறும். அணுக்கமான நட்பு நாடாகவும் ஆசியான் உறுப்பினராகவும் விளங்கும் பிலிப்பைன்சுடன் மலேசியா கொண்டுள்ள நெருக்கமான நட்புறவின் அடையளமாக இந்த பயணம் அமைந்துள்ளது.

இரு நாடுகள் நலன் சார்ந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் அரசியல், பொருளாதார மற்றும் மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கும் பிரதமரின் இந்தப் பயணம் பெரிதும் துணை புரியும் என்று விஸ்மா புத்ரா கூறியது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் பிலிப்பைன்சில் வசிக்கும் மலேசியர்களுடன் சந்திப்பு நடத்துவார்.


Pengarang :