NATIONAL

ஜூலை அல்லது ஆகஸ்டில் மாநிலத் தேர்தல்- மந்திரி புசார் கோடி காட்டினார்.

கோல லங்காட், மார்ச் 6- வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளதை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோடி காட்டியுள்ளார்.

இந்த மாநிலத் தேர்தலில் சம்பந்தப்பட்டுள்ள திரங்கானு, கிளந்தான், பினாங்கு, கெடா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய ஆறு மாநிலங்களும் அதற்கான தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

ஜூன் மாத மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் சட்டமன்றம் கலைக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே, குறைந்த பட்சம் ஜூலை மாதம் அல்லது அதிகப்பட்சம் ஆகஸ்டு மாதம் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள பந்திங் நகரில் நடைபெற்ற கோல லங்காட் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வுக்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து மாநிலச் சட்டமன்றங்களையும் ஏக காலத்தில் கலைப்பதற்கு ஐந்து மாநிலத் தலைவர்களுடன் அண்மையில் நடத்தப்பட்ட சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டதாகச் சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அமிருடின் சொன்னார்.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எனது சகாக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இச்சந்திப்பில் நாங்கள் மனம்விட்டு பேசியதோடு இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்தையும் கொண்டிருக்கிறோம் என அவர் மேலும் கூறினார்.


Pengarang :