NATIONAL

பள்ளிகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்த வழிகாட்டி மறுஆய்வு- மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 6- புதிய பள்ளிக் கட்டிடங்களை விரைவாக நிர்மாணிப்பதற்கு ஏதுவாக இதன் தொடர்பான விதிமுறைகளை மறுஆய்வு செய்ய கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி ஒரு பள்ளியை நிர்மாணிப்பதற்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் எடுத்துக் கொள்வதாகத் துணைக் கல்வியமைச்சர் லிம் ஹூய் யிங் கூறினார்.

பள்ளி நிர்மாணிப்பு குறிப்பாக அடிப்படை வசதிகள் மற்றும் அதன் தொடர்பான விவகாரங்களில் நாங்கள் மறுஆய்வுப் பணியை இன்னும் தொடங்கவில்லை. எனினும், அத்திட்டங்களைக் குறுகிய காலத்தில் முடிப்பதற்கு ஏதுவாக மறுஆய்வுப் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

இந்த விஷயத்தில் நில ஒப்படைப்பு பிரதானப் பிரச்சனையாக உள்ளது. பள்ளியைக் கட்டுவதற்கு முன்னர் நில உரிமையை உறுதி செய்வது பிரதான அம்சமாக உள்ளது. இதன் அடிப்படையில் இந்த வழிகாட்டிகளை மறுஆய்வு செய்யவிருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று அம்பாங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். புதிய பள்ளிகளைக் கட்டுவது தொடர்பான வழிகாட்டிகளை மறுஆய்வு செய்வதற்கும் புதுப்பிப்பதற்கும் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதா என்று அவர் கேள்வயெழுப்பியிருந்தார்.

புதிய பள்ளிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் மாநிலக் கல்வி இலாகாக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கல்வியமைச்சு பெறும் என்றும் லிம் தனது பதிலில் தெரிவித்தார்.


Pengarang :