NATIONAL

நாட்டில் திவாலானவர்கள் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சி- மக்களவையில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 6- நாட்டில் திவாலானவர்களின் எண்ணிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அபரிமிதமான அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டில் 5,695 பேர் மட்டுமே திவாலானதாக அறிவிக்கப்பட்டதாகத் துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் கூறினார்.

இளைஞர்கள் மத்தியிலும் திவாலானவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறிய அவர், கடந்த 2021ஆம் ஆண்டில் 22.5 விழுக்காடாக இருந்த திவாலான இளைஞர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 13.5 விழுக்காடாக உள்ளது என்றார்.

ஒருவரை திவாலானவராக அறிவிப்பதற்கு முன்னர் நிதி நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட பல விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். திவால் என்பது அந்த நடவடிக்கையின் கடைசி கட்டமாகவே இருக்க வேண்டும் என்றார் அவர்.

திவால் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. அந்த திருத்தம் செய்யப்படுவதற்கு முன்னர், 50,000 வெள்ளிக்கும் குறைவான கடன் தொகையில் சம்பந்தப்பட்டவர்கள் மார்ச் முதல் தேதி தொடங்கி திவால் பட்டியலிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் 19,588 பேர் திவாலானதாக மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார். திவாலானவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாயா பெசார் உறுப்பினர் டத்தோ முகமது
ஷஹார் அப்துல்லா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.


Pengarang :