NATIONAL

ஜொகூர், பகாங், மலாக்காவில் உள்ள துயர் துடைப்பு மையங்களில் 42,000 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், மார்ச் 7- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் நிலைமை சற்று சீரடைந்து வருகிறது. இன்று காலை 8.00 நிலவரப்படி ஜொகூர், மலாக்கா மற்றும் பகாங்கில் உள்ள 234 துயர் துடைப்பு மையங்களில் தங்கி உள்ளவர்களின் எண்ணிக்கை 42,909ஆக உள்ளது.

ஜொகூர் மாநிலத்தில் நேற்று 40,129ஆக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை நேற்றிரவு 39,620ஆக குறைந்துள்ளதோடு 16 துயர் துடைப்பு மையங்களும் மூடப்பட்டுள்ளன.

சிகாமாட் மாவட்டத்தில் வெள்ளம் நிலைமை சீரடைந்து வருகிறது. எனினும், பத்து பகாட், மூவார் மற்றும் தங்காங் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பத்து பகாட் மாவட்டத்தில் மிக அதிகமாக 22,209 பேரும் மூவாரில் 5,094 பேரும் சிகாமாட்டில் 4,036 பேரும் துயர் துடைப்பு மையங்களில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

பகாங் மாநிலத்தில் 766 குடும்பங்களைச் சேர்ந்த 2,684 பேர் துயர் துடைப்பு மையங்களில் தொடர்ந்து தங்கியுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை நிறுவனச் செயலகம் கூறியது.

ரொம்பின் மாவட்டத்திலுள்ள 18 துயர் துடைப்பு மையங்களில் 2,671 பேரும் மாரானில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் 13 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.

மலாக்கா மாநிலத்தின் ஜாசினில் 161 குடும்பங்களைச் சேர்ந்த 605 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :