SELANGOR

துர்நாற்றம் ஏற்படக் காரணமான உரத் தொழிற்சாலையை மூட உத்தரவு

ஷா ஆலம், மார்ச் 7- தஞ்சோங் காராங், பாகான் தெங்கோராக்கில் உள்ள உரத் தொழிற்சாலையை மூட கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

துர்நாற்றம் ஏற்படும் அளவுக்குச் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தத் தவறியதற்காக அந்த தொழிற்சாலைக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் கோழியின் கழிவுகளை உரமாக மாற்றும் அந்த தொழிற்சாலை மீது இம்மாதம் 2ஆம் தேதி சோதனை மேற்கொண்ட அமலாக்க அதிகாரிகள் அதன் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவு பிறப்பித்ததாக நகராண்மைக் கழகம் கூறியது.

மறைவானப் பகுதியில் விவசாய நடவடிக்கையை மேற்கொள்வது போன்ற போர்வையில் செயல்பட்டு வந்த அந்த தொழிற்சாலை மீது ஏற்கனவே கடந்தாண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தரவுகள் காட்டுவதாக நகராண்மைக் கழகத்தின் பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் முறையாகச் சுத்தத்தைப் பேணாதக் காரணத்தால் சுற்றுவட்டாரத்தில் கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டதாக அது தெரிவித்தது.

இந்நடவடிக்கையின் போது முறையான லைசென்ஸ் இன்றி செயல்பட்டதற்காக அந்த தொழிற்சாலைக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு ஒரு ஜெனரேட்டர் இயந்திரம் மற்றும் போர்க்லிப்ட் இயந்திரம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த தொழிற்சாலைக்கு எதிராக 2007ஆம் ஆண்டு கோல சிலாங்கூர் மாவட்ட மன்ற வர்த்தக மற்றும் தொழில்துறை துணைச் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.


Pengarang :