NATIONAL

மலேசியாவில் அமேஸான் முதலீடு- அரசியல் நிலைத்தன்மை, அரசின் தெளிவான கொள்கையே காரணம்-பிரதமர்

கோலாலம்பூர், மார்ச் 7-அமேஸான் வெப் செர்விசஸ் நிறுவனம் (ஏ.டபள்யூ.எஸ்.) மலேசியாவில் முதலீடு செய்வதற்கு நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் தெளிவான கொள்கைகளைக் காரணம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வரும் 2037 ஆம் ஆண்டு வரை 2,550 கோடி வெள்ளியை முதலீடு செய்யும் அந்நிறுவனத்தின் திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் நாட்டின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதில் உயரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிதி அமைச்சருமான அவர் சொன்னார்.

முதலீடு தொடர்பாகக் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஏ.டபள்யூ.எஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வந்தது. தெளிவான கொள்கைகளைக் கொண்ட நிலை தன்மையுடன் கூடிய நிர்வாகம் அமையும் வரை அத்தரப்பினர் காத்திருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பல ஆசியான் நாடுகள் ஏ.டபள்யூ.எஸ் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தன. ஆனால் அந்த நிறுவனம் மலேசியாவைத்தான் தேர்ந்தெடுத்தது. இது நாட்டின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளதோடு மேற்கத்திய மற்றும் கிழக்கு நாடுகளில் உள்ள புதிய முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்குரிய சாத்தியத்தையும் உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

மக்களவையில் இன்று அமைச்சரிடம் கேள்விகள் எனும் அங்கத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். ஏ.டபள்யூ.எஸ் மற்றும் டெல்சா செய்துள்ள முதலீட்டின் வாயிலாக ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் தரமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிற்குள் நுழைவதை ஊக்குவிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாயான் பாரு
தொகுதி ஹராப்பான் உறுப்பினர் சிம் ஸி ஷின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மலேசிய முதலீட்டு செயற்குழு மற்றும் முதலீடு மீதான தேசியச் செயல் குழுவின் உருவாக்கத்தின் வாயிலாக வகுக்கப்பட்ட புதிய முதலீட்டுக் கொள்கைக்கேற்ப இந்த ஏ.டபள்யூ.எஸ். நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் உயர் அறிவாற்றல் மிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அன்வார் சொன்னார்.


Pengarang :