NATIONAL

பயங்கரவாதச் சித்தாந்தங்களில் மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுக்க இணையப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்

ஷா ஆலம், மார்ச் 7- பயங்கரவாதச் சித்தாந்தங்களை பரப்பும் சாதனமாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து சமூக ஊடகங்கள் மற்றும் தொடர்பு ஒருங்கமைப்புகளைப் பாதுகாக்க இணைய பாதுகாப்புக்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளித்து வரும்.

பொது ஒழுங்கிற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பழைமைவாதச் சித்தாந்தங்களின் பால் பொது மக்கள் ஈர்க்கப்படாமலிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹாமி ஃபாட்சில் கூறினார்.

தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் சித்தாந்தங்கள் விரிவாக்கம் காண்பதைக் காண நாம் விரும்பவில்லை. அவற்றை உடனடியாக களைய வேண்டும். ஆகவே, இணையப் பாதுகாப்பு நமது தலையாயக் கடமையாக இருந்து வருகிறது என்றார் அவர்.

பல விஷயங்கள் அச்சமூட்டும் வகையில் உள்ளன. ஸ்கேம்மர் எனப்படும் இணை மோசடி மட்டுமல்லாது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய தீவிரவாத மற்றும் பழைமைவாத சித்தாந்தங்களைக் கொண்ட இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) எனப்படும் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளும் அதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள காராங்கிராப் குழும அலுவலகத்தில் நடைபெற்ற சினார் ஹரியான் உடனான மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது ஃபாஹாமி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் உள்நாட்டினர், வெளிநாட்டினர் என்ற பாகுபடின்றி அனைவரின் விஷயத்திலும் அரசாங்கம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்றும் அவர் உறுதியளித்தார்..

டாயேஷ் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடைய சமூக ஊடகங்களின் நடவடிக்கையைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அரச மலேசியப் போலீஸ் படை அண்மையில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :