NATIONAL

பள்ளிவாசல்களில் அரசியல் பிரசாரத்திற்கானத் தடையை நானும் பின்பற்ற வேண்டும்- பிரதமர் கூறுகிறார்

புத்ராஜெயா, மார்ச் 7- பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களில் அரசியல் உரையாற்றுவதற்கு அல்லது பிரசார நடவடிக்கைளை  மேற்கொள்வதற்கு மாநில சமய அதிகாரிகள் விதித்துள்ள தடையை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

அத்தகைய வழிபாட்டுத் தலங்களில் அரசியல் உரை அல்லது பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்டுள்ளத் தடை தாம் உள்பட அனைவருக்கும் பொருந்தும் என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

அந்த தடையுத்தரவை மதிக்கும் விதமாகப் பள்ளிவாசல்களில் நடைபெறும் நிகழ்வுகளில் உரையாற்றுவதை தாம்  தவிர்த்து வருவதாக அவர் சொன்னார்.

வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்லும்போது அதிகாரிகளின் உத்தரவை மதித்து பள்ளிவாசல்களில் பிரசங்கம் அல்லது உரை நிகழ்த்துவதை நான் தவிர்த்து விடுகிறேன். தொழுகையில் கலந்து கொள்பவர்களுடன் கைக்குலுக்குவது மற்றும் உரையாடுவது போன்ற நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுகிறேன் என்றார் அவர்.

நாடு  முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களில் அரசியல்வாதிகள் சமய உரை அல்லது அரசியல் உரை நிகழ்த்துவது குற்றமல்ல என்றும் இஸ்லாமிய அரசியல் பற்றி பேசுவது அவர்களின் கடமை என்றும் பாஸ் கட்சித் தலைவர்  டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கடந்த  4ஆம் தேதி கூறியிருந்தது தொடர்பில் பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :