NATIONAL

1எம்டிபி நிதி, சொத்துக்களில் 70 விழுக்காடு மீட்கப்பட்டு விட்டது- எம்.ஏ.சி.சி. தகவல்

புத்ரா ஜெயா, மார்ச் 7- சத்து மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் நிறுவனத்திற்குச் (1எம்டிபி) சொந்தமான 70 விழுக்காட்டிற்கும் மேல் அதாவது 2,893 கோடி வெள்ளி மதிப்புள்ள நிதி மற்றும் சொத்துக்கள் இதுவரை மீட்கப்படுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

எஞ்சியுள்ள 30 விழுக்காட்டுச் சொத்துக்களைப் பொறுத்த வரை, அவற்றை இயன்ற வரை மீட்க முயற்சி செய்கிறோம். வெளிநாடுகள் உள்பட பல்வேறு இடங்களில் அந்த சொத்துக்களை அடையாளம் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

1எம்டிபி சொத்துக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிரதான நிறுவனங்களில் எம்.ஏ.சி.சி.யும் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார். இண்டர்ஷேனல் பெட்ரோலியம் இன்வெஸ்மெண்ட் கம்பெனியின் (ஐ.பி.ஐ.சி.) 806 கோடி வெள்ளி சொத்துக்களை மீட்பதில் எம்.ஏ.சி.சி. முக்கியப் பங்கினை ஆற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, யு.ஐ.டி.எம். எனப்படும் யுனிவெர்சிட்டி டெக்னோலோஜி மாரா ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கு ஏற்பட்ட 15 கோடியே 70 லட்சம் வெள்ளி இழப்பில் ஊழல் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காகத் தடயவியல் பிரிவை எம்.ஏ.சி.சி.
அமைதுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இந்த விசாரணையில் அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், எல்லாத் தரப்பினருக்கும் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்றார். இதன் தொடர்பான விசாரணை முற்றுப் பெற்றவுடன் அதன் முடிவுகள்
பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :