NATIONAL

போலீஸ் நிலையத்தில் ஆடவர் மரணம்- முழு அறிக்கை கிடைத்தவுடன் மரண விசாரணைக்கு விண்ணப்பம் செய்யப்படும்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 7- பாயான் லெப்பாஸ் போலீஸ் நிலையத்தின் பின்புறம் போலீஸ்காரர் ஒருவர் மூன்று துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்த கிடந்த சம்பவம் தொடர்பான சில விசாரணை அறிக்கைகளுக்காகப் போலீசார் காத்திருக்கின்றனர்.

அந்த அறிக்கைகள் கிடைத்தவுடன் இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக மரண விசாரணை நடத்துவதற்கு விண்ணப்பம் செய்யப்படும் என்று பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ முகமது சுஹாய்லி முகமது ஜைன் கூறினார்.

இரசாயன, வெடி மருந்து, உடற்கூறு உள்ளிட்ட விசாரணை அறிக்கைகள் கிடைத்தவுடன் இச்சம்பவம் மீதான மரண விசாரணைக்கு விண்ணப்பம் செய்யவுள்ளோம். காவல் துறையின் விசாரணையைப் பொறுத்த வரை அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

முதலாவது மற்றும் இரண்டாவது தோட்டக்கள் அந்த சார்ஜனின் உயிரை உடனடியாகப் பறிக்கும் அளவுக்கு முக்கிய உறுப்புகளைத் தாக்கவில்லை. சம்பவத்தின் போது வேறு யாரும் அங்கு செல்லவில்லை என்பதை விசாரணை முடிவுகள் காட்டுகின்றன.

எனினும், இந்த சம்பவத்தில் குற்றத் தன்மை இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் என்றார் அவர்.

கடந்த மாதம் 19ஆம் தேதி சார்ஜன் ஜனா மில்லி (வயது 51) என்ற அந்த போலீஸ்காரர் பாயான் லெப்பாஸ் போலீஸ் நிலையத்தின் பின்புறம் நெஞ்சு, கழுத்து மற்றும் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.


Pengarang :