NATIONAL

ஒன்பதாவது தொற்றுநோய் வாரத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 3.9 சதவீதம் குறைந்துள்ளது

புத்ராஜெயா, மார்ச் 8: இந்த ஆண்டு பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை ஒன்பதாவது தொற்றுநோய் வாரத்தில் (ME) டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 3.9 சதவீதம் குறைந்து 2,062 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் 2,145 டிங்கி சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டிங்கி காய்ச்சலால் 15 இறப்புகள் இந்த ஆண்டு ஒன்பதாவது தொற்றுநோய் வாரத்தில் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் 57 ஹாட்ஸ்பாட் இடங்கள், சபாவில் 16, பேராக்கில் மூன்று, மற்றும் பினாங்கு, கோலாலம்பூர், புத்ராஜெயா தலா நான்கு எனும் கணக்கில் மொத்தம் 84 ஹாட்ஸ்பாட் இடங்கள் பதிவாகியுள்ளன.

பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான குப்பைகள் மற்றும் கொள்கலன்கள் சுற்றுச்சூழலில் சிக்கி இருப்பதாகவும், இடைவிடாத வெப்பமான காலநிலை ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்து டிங்கி சம்பவங்களை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எனவே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிங்கி சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அங்கு வசிப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் (PBT) இணைந்து சுற்றுச்சூழலில் உள்ள நீர் தங்கும் இடங்களை உடனடியாக துப்புறவு செய்ய வேண்டும் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார்.

மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதால், டிங்கி காய்ச்சல் பரவும் அபாயம் உண்டு. இதனால், புதிய பகுதிகளில் டிங்கி சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும், காரணம் டிங்கி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார்,

– பெர்னாமா


Pengarang :