SELANGOR

சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்ட பயன்படுத்தப்படும் நிலங்கள் பறிமுதல் செய்யப்படும்

ஷா ஆலம், மார்ச் 8- சட்டவிரோதக் குப்பை அழிப்பு மையங்களாகச் செயல்படுவதற்கு வாடகைக்கு விடப்படும் தனியார் நிலங்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் சிலாங்கூர் மாநில நில மற்றும் கனிம வள இலாகாவுக்கு உள்ளது.

அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அறிக்கைகளுக்குப் பின்னரும் நில உரிமையாளர்கள் தொடர்ந்து தங்கள் நிலங்களைச் சட்டவிரோதக் குப்பை அழிப்பு மையங்களாகச் செயல்பட அனுமதித்து வந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த இலாகாவின் இயக்குநர் டாக்டர் யூஸ்ரி ஜக்காரியா கூறினார்.

கோம்பாக், உலு லங்காட், சிப்பாங், கோல சிலாங்கூர் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதக் குப்பை கொட்டும் மையங்கள் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஊராட்சி மன்றங்கள் முதலில் நடவடிக்கை எடுக்கும். பின்னர் நில மற்றும் கனிமவள இலாகா இதில் பங்கேற்கும். வழக்கமாக நில மற்றும் கனிமவள இலாகா லோரிகளைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைளை மேற்கொள்ளும் என்றார் அவர்.

சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் நிலங்கள் யாருக்குச் சொந்தமானவை என முதலில் ஆராய்வோம். அரசாங்க நிலமாக இருந்தால் உடனடியாக அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்வோம். தனியார் நிலமாக இருப்பின் நிலத்தைப் பழைய நிலைக்கு மாற்றக் கோரி அதன் உரிமையாளருக்குத் தேசிய நிலச் சட்டத்தின் 7ஏ அறிக்கையை அனுப்புவோம்.

அந்த உத்தரவு பின்பற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நிலம் பறிமுதல் செய்யப்படும் என
அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நில மற்றும் கனிவள இயக்குநர் மற்றும் சிலாங்கூர் துணை நில அதிகாரியுடனான டவுன்ஹால் கலந்தாய்வு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

குப்பை கொட்டும் மையங்களாகச் செயல்பட்ட நிலங்களைப் பழைய நிலைக்குச் சீர்படுத்தாவிட்டால் அப்பணி முற்றுப் பெறும் வரை ஒவ்வொரு நாளும் 100 வெள்ளி வீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.


Pengarang :