NATIONAL

புத்ரா ஜெயா எம்.ஆர்.டி. திட்டம் மாநகர் சாலைகளில் நெரிசலைக் குறைக்க உதவும்

புத்ராஜெயா, மார்ச் 13- புத்ராஜெயா நகருக்கான இரண்டாம் கட்ட மாஸா இலகு 
இரயில் (எம்ஆர்டி) சேவை மார்ச் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது. இச்சேவையின் வாயிலாகக் குறிப்பாக, கோலாலம்பூர் நகர மையத்திற்குச் செல்லும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து  நெரிசலைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாகக், குறிப்பாக புத்ராஜெயா மற்றும் சிரம்பானிலிருந்து வரும் வாகனமோட்டிகள் மாஜூ விரைவுச்சாலை மற்றும் சுங்கை பீசி விரைவுச்சாலைகளில் 
கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கின்றனர். இதனால் பணியிடம் 
அல்லது பிற இடங்களுக்குச் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

கம்போங் பத்து முதல் புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான 40.2 கிலோமீட்டர் 
வரையிலான இந்த  இரண்டாம் கட்ட இரயில் திட்டம்  வேலைக்குச்  செல்லும் 
மாநகர்வாசிகளின் போக்குவரத்து மையமாக விளங்கும்  சுங்கை பீசி, சான் சாவ் லின் மற்றும் அம்பாங் பார்க் உள்ளிட்ட  இடங்கள் அல்லது நிலையங்களை 
உள்ளடக்கியுள்ளது.
 
கிளானா ஜெயா இலகு ரயில் போக்குவரத்து (எல்ஆர்.டி.), காஜாங் எம்.ஆர்.டி. மற்றும் மோனோரயில்   நிலையங்களுடன் வழி மாற்று வழித்தட வசதிகளையும் இது கொண்டுள்ளது.

குவாசா டாமன்சாராவிலிருந்து புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான 57.7 கிலோ மீட்டர் தூரம் கொண்ட  இந்த தடம் 36 இரயில் நிலையங்கள், 9 நிலவறை நிலையங்கள் 
மற்றும் 49 இரயில் பெட்டிகளை  உள்ளடக்கியுள்ளது.

இந்த புத்ராஜெயா எம்.ஆர்.டி. பாதையில் உள்ள அனைத்து ரயில்களும் நான்காம் கட்ட தானியங்கி முறையை  அதாவது ரயில்கள் ஆள்பலத்தின் உதவியின்றி தானாகவே 
கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன  என்று இந்த தடத்தின் செயல்பாடுகளை 
ஆய்வு செய்தபோது எம்.ஆர்.டி. கார்ப்ரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ முகமது ஷாரிப் ஹஷிம் கூறியிருந்தார்.

Pengarang :