NATIONAL

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு மாநிலத்தின் வருமானம் அதிகரிப்பு- சுல்தான் பெருமிதம்

ஷா ஆலம், மார்ச் 13- ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு மாநிலத்தின் வருமானம் கடந்தாண்டு அதிகரித்தது குறித்து சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் 228 கோடியே 40 லட்சம் வெள்ளியாக இருந்த மாநிலத்தின் வருமானம் கடந்தாண்டு 253 கோடியே 30 லட்சம் வெள்ளியாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 205 வெள்ளி இலக்கை விட இது அதிகமாகும் என்றார்.

எனது அரசாங்கத்தின் நிதி நிலை குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். கடந்த 2022ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்திற்குச் சிறப்பான ஆண்டாக விளங்கியதோடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியல் 24.8 விழுக்காட்டுப பங்களிப்பையும் அது வழங்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 விழுக்காடாக மட்டுமே இருந்த வேளையில் சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சி ஐந்து விழுக்காட்டை எட்டியது என்று இன்று 14வது மாநிலச் சட்டமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

கித்தா சிலாங்கூர் உணர்வுடன் மாநிலத்தைச் செவ்வனே வழிநடத்திச் செல்லும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான நிர்வாகத்திற்குத் தாம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

அதிகமான முதலீட்டாளர்களை மாநிலத்திற்கு ஈர்ப்பதில் நட்புறவான அணுகுமுறையைக் கடைபிடிக்கும்படியும் மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 970 கோடி வெள்ளி மதிப்பிலான 199 தொழில்துறை சார்ந்த முதலீட்டுத் திட்டங்களை மாநில அரசு ஈர்த்துள்ளது தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்திட்டங்களை அங்கீகரிப்பதன் மூலம 11,601 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :