NATIONAL

மாநிலத் தேர்தலில் விதிமுறைகளை முறையாகக் கடைபிடியுங்கள்- அரசியல்வாதிகளுக்குச் சுல்தான் அறிவுறுத்து

ஷா ஆலம், மார்ச் 14- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலின் போது நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அனைத்துத் தரப்பினரும் முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு ஒருவரை ஒருவர் மதித்தும் செயல்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மக்கள் நன்கு கவனிக்கும் அதேவேளையில் மதிப்பீடும் செய்வர் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்தார்.

பள்ளிவாசல்களும் சூராவ்களும் தேர்தல் பிரசார களமாக மாற்றப்படுவதைத் தடுப்பதற்கு ஏதுவாக அதன் தொடர்பான உத்தரவுகளைத் தொடர்ந்து வெளியிடுமாறு சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய மன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று மாநிலச் சட்டமன்றத்தின் 14வது கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து உறுப்பினர்களும் விவேகத்துடனும் ஆக்கப்பூர்மான முறையிலும் விவாதங்களில் பங்கேற்று பிரச்சனைகளுக்கு முறையான வழியில் தீர்வு காண முற்பட வேண்டும் என்றார் அவர்.

மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் சட்டமன்றங்களைக் கலைக்க ஐந்து மாநிலங்கள் இணக்கம் கண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

ஆறு மாநில மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கிடையே அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களின் ஐந்தாண்டு தவணைக் காலம் இவ்வாண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைவதால் இம்மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.


Pengarang :