SELANGOR

வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு வெ.55.6 கோடி நிதி ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 14- வெள்ளத்தைத் தடுப்பதற்கு ஏதுவாக அடிப்படை
வசதிகளை மேம்படுத்துவதற்கு சிலாங்கூர் அரசு 55 கோடியே 66 லட்சம்
வெள்ளியை அங்கீகரித்துள்ளது.

அந்த தொகையில் 44 விழுக்காடு அல்லது 24 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையிடம் வழங்கப்படுவதாகச் சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

வெள்ளத் தடுப்பணை, வெள்ளத் தடுப்புச் சுவர்கள், வெள்ள நீர் சுரங்கம், குறுக்கு நீர் வழித்தடம் போன்ற திட்டங்களை அந்த துறை மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

நிலத்தடி நீர் சேகரிப்பு, உயரமான நீர்த்தேக்கங்கள், செங்குத்து மற்றும் கிடைமட்ட நீர் சேகரிப்பு போன்ற வெள்ள நீர் சேகரிப்புத் திட்டங்களோடு வடிகால்களைத் தரம் உயர்த்தும் பணியும் மேற்கொள்ளப்படும் என்ற அவர் தெரிவித்தார்.

தேசிய வெள்ள முன்னெச்சரிக்கை கணிப்பு, ஒருங்கிணைந்த ஆற்று வடிநிலப் பகுதி மேலாண்மை ஆய்வு, வெள்ளத் தணிப்பு பெருந்திட்ட ஆய்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்புறவான வெள்ளத் தடுப்பு பெருந்திட்டம் ஆகியவையும் அத்திட்டங்களில் அடங்கும் என்று அவர் குறிப்பட்டார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று புக்கிட் லஞ்சான் உறுப்பினர் எல்சபெத் வோங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு மாநில அரசு அமல்படுத்தும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எலிசபெத் கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :