NATIONAL

மாநில அரசின் மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வுகளை நடத்த வெ.41.6 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 14- மாநில அரசின் நலத் திட்டங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதலாம் கட்ட ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்திற்கு 41 லட்சத்து 60 வெள்ளி செலவிடப்பட்டது.

முன்பு ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் என அழைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிற்கான மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப் பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முன்பு அமலில் இருந்த பெடுலி ராக்யாட் முன்னெடுப்பின் (ஐ.பி.ஆர்.) மறு வடிவமாக விளங்கும் இந்த திட்டத்திற்கு  பொதுமக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது என குறிப்பிட்டார்.

கடந்த வாரம் வரை எட்டு இடங்களில் நடத்தப்பட்ட இந்த கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டங்களில் 41,100 பேர் கலந்து கொண்டுள்ளனர். இத்திட்டத்தின் ஒன்பதாவது நிகழ்வை சபாக் பெர்ணம் மாவட்டத்தில் இந்த வாரம் நடத்த விருக்கிறோம். என்று அவர் சொன்னார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று இந்த ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பொன்யாயாங் திட்டத்திற்கு உண்டாகும் செலவு குறித்து செமினி உறுப்பினர் ஜக்காரியா ஹனாபி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் உள்ளடக்கம் குறித்து சுங்கை பாஞ்சாங் உறுப்பினர் டத்தோ முகமது இம்ரான் தம்ரின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமிருடின், ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் உள்ள அதே உள்ளடக்கத்தை இந்த திட்டமும் கொண்டுள்ளது என்றார்.


Pengarang :