NATIONAL

மூன்று மாநிலங்களில் உள்ள 126 நிவாரண மையங்களில் 38,738 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், மார்ச் 14- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் உள்ள 126 தற்காலிக நிவாரண மையங்களில் 38,738 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜொகூர் மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது 39,587 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைச் செயல்குழு கூறியது. நேற்றிரவு 8.00 மணியளவில் இந்த எண்ணிக்கை 38,677 பேராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 123 துயர் துடைப்பு மையங்களில் மொத்தம் 10,747 குடும்பங்கள் அடைக்கலம் நாடியுள்ளனர். பத்து பஹாட் மாவட்டத்தில் 37,827 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் மூவார் (504 பேர்), சிகாமாட் (193 பேர்), தங்காங் (63 பேர்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

பகாங் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்தது.

நேற்றிரவு 145ஆக இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 127ஆக குறைந்துள்ளது என அது குறிப்பிட்டது.

மலாக்காவில் வெள்ளத்தில் இன்னும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரே மாவட்டமான ஜாசினில் 24 பேர் பாரிட் பெங்குளு தேசிய பள்ளியிலுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர்.


Pengarang :