NATIONAL

வயதானப் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்கச் சட்டம் வேண்டும்- ரவாங் உறுப்பினர் கோரிக்கை

ஷா ஆலம், மார்ச் 15- வயதானப் பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் நேற்று பரிந்துரைக்கப்பட்டது.

வசதியான நிலையில் இருக்கும் பிள்ளைகள் கூட தங்கள் பெற்றோர்களை முறையாக பராமரிக்காதக் காரணத்தால் தனது தொகுதியைச் சேர்ந்த பல மூத்தக் குடிமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக ரவாங் தொகுதி உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிப்பதற்காகச் சட்டம் இயற்றுவது புதிதான ஒன்றல்ல. அண்டை நாடான சிங்கப்பூரில் கூட இத்தகைய நடைமுறை அமலில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஆகவே, வயதான பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன் என்று மாநிலச் சட்டமன்றத்தில் அவர் சொன்னார்.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் மக்களின் ஆயுள்காலம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் வயதை கட்டங் கட்டமாக நீட்டிப்பதற்கான சாத்தியத்தை அரசு ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :