NATIONAL

நீர் உத்தரவாதத் திட்டப் பணிகள் 40.8 விழுக்காடு பூர்த்தி- ஆண்டு இறுதியில் முழுமை பெறும்

ஷா ஆலம், மார்ச் 25- மாநிலத்தில் நீர் மேலாண்மையை விரிவான அளவில் ஒருங்கிணைக்க வகை செய்யும் மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டப் பணிகள் (எஸ்.ஜே.ஏ.எம்.)  ஆண்டு இறுதியில் முழுமை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திட்டம்  கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வரை 40.8 விழுக்காட்டை எட்டியிருந்தது.

கடந்த 2021 நவம்பர் முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நான்கு தொகுப்புகளைக் கொண்ட இந்த திட்டம் இவ்வாண்டு இறுதியில் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

கடந்தாண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஏ பிரிவு பணிகள் இதுவரை 26.91 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள வேளையில் பி பிரிவு கடந்த 2021 டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கப்பட்டு 52.3 விழுக்காடு நிறைவடைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இது தவிர கடந்த 2021 டிசம்பரில் தொடங்கப்பட்ட சி பிரிவு பணிகள் 45.36 விழுக்காடு முழுமை அடைந்துள்ள நிலையில் 2021 டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கப்பட்ட டி பிரிவு 52.3 விழுக்காடு நிறைவை எட்டியுள்ளது என்றார் அவர்.

சுங்கை சிலாங்கூரில் நிலவும் நீர் மாசுபாடு பிரச்சனைக்கு தீர்வு காண்பது மற்றும் கோடை காலத்தில் போதுமான அளவு மூல நீர் ஆதாரம் இருப்பதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சட்டமன்றத்தில் இன்று  குறிப்பிட்டார்.

இந்த மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டத்தை மேற்கொள்ள மாநில அரசு இவ்வாண்டு 33 கோடியே 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது. நீர் மாசுபாடு ஏற்படும் பட்சத்தில் நீர் சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய அதில் 10 கோடி பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.


Pengarang :