NATIONAL

நான்கு மாவட்டங்களில் டிங்கி பரவலைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை- சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், மார்ச் 15- அதிக டிங்கி சம்பவங்களைப் பதிவு செய்துள்ள நான்கு மாவட்டங்களில் கடந்த மாதம் 15 முதல் இம்மாதம் 22 வரை ஒருங்கிணைந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பல்வேறு அரசு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

அந்த துறைகள் யாவும் ஒன்றிணைந்து ஏடிஸ் கொசுக்கள் வளரும் இடங்களை அழிப்பது, துப்புரவு இயக்கங்களை மேற்கொள்வது, டிங்கி விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துவது மருந்து தெளிப்பது போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்கு பின்புறம் உள்ள வழிகளில் சுத்தம் பராமரிக்கப்படாதது, சட்டவிரோதத் தோட்டங்கள், காலி வீடுகள், கைவிடப்பட்ட நிலங்கள் போன்றவை ஏடிஸ் கொசுக்களின் பரவல் அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று ஸ்ரீ செத்தியா உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இம்மாதம் 11ஆம் தேதி வரை சிலாங்கூரில் 11,183 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறிய சித்தி மரியா, கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவானதை விட இது 143 விழுக்காடு (6,603)
அதிகமாகும் என்றார்.

இம்மாதம் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் மாநிலத்தில் 1,055 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை 1,002 ஆகும் என்றார் அவர்.


Pengarang :