SELANGOR

2025ஆம் ஆண்டிற்குள் அடுக்குமாடி குடியிருப்புகளில் 6 லட்சம் எல்.இ.டி. விளக்குகள்- மாநில அரசு இலக்கு

சிப்பாங், மார்ச் 20- வரும் 2025ஆம் ஆண்டிற்குள் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆறு லட்சம் எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தும் இலக்கை அடைய மாநில அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஒரு கோடி மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து தடுக்க முடியும் என்பதோடு கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்க முடியும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

எதிர்காலத் தலைமுறையினர் நம்மைப் போலவே அதாவது நாகரீக சூழலிலும் சுற்றுச் சூழலுக்கு பங்கம் வராத வகையிலும் வாழ்க்கையைத் தொடர்வதை உறுதி செய்யும் நோக்கிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், நாம் நீடித்த மேம்பாட்டு இலக்கை (எஸ்.டி.ஜி.எஸ்) அடையவும் கார்பன் வெளியேற்றத்தைத் தடுத்து பூமியைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக மரங்கள் வெடப்படுவதை தடுத்து சுபிட்சமான வாழ்வு வாழவும் இயலும் என்றார் அவர்.

பூச்சோங், தாமான் புத்ரா பெர்டானாவிலுள்ள சொராஜா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பசுமைத் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் எல்.இ.டி. விளக்குத் திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சீரான நடவடிக்கைத் திட்டத்தோடு கூட்டு நிர்வாக மன்றம் மற்றும் எம்.சி. எனப்படும் மேலாண்மைக் கழகம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்போடு இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின் வாயிலாக இந்த திட்டம் திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் முன்கூட்டியே இலக்கை அடைய முடியும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :