NATIONAL

சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை- மரங்கள் விழுந்து கார்கள், வீடுகள் சேதம்

கோலாலம்பூர், மார்ச் 21- சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு பெய்த இடியுடன் கூடிய கனத்த மழை காரணமாக டாமன்சாரா டாமாய், ஜாலான் ஈப்போ, மற்றும் சுங்கை பூலோவில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.

பலத்தக் காற்று காரணமாக டாமன்சாரா டாமாய், தாமான் டேசாரியாங்கில் 15 மரங்கள் வேறோடு சாய்ந்ததில் ஏழு வீடுகள் சேதமடைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் மோர்னி மாமாட் கூறினார்.

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு வாகனங்கள் மீது மரம் விழுந்ததால் அவை பலத்த சேதத்திற்குள்ளாயின. சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து விடியற்காலை 4.19 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் சுங்கை பூலோ, கோத்தா அங்கிரிக், டாமன்சாரா, ரவாங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 28 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

முன்னதாக, இரவு மணி 10.15 அளவில் செலாயாங் நோக்கிச் செல்லும் ஜாலான் ஈப்போ பகுதியில் மரம் விழுந்த து தொடர்பில் தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :