NATIONAL

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் “ஆட்டிஸம்“ விழிப்புணர்வு முகாம்

கிள்ளான், மார்ச் 21- “ஆட்டிஸம் குறைபாடு“ தொடர்பான விழிப்புணர்வு முகாம் ஒன்றை செந்தோசா சட்டமன்றத் தொகுதி சேவை மையம் அண்மையில் இங்கு நடத்தியது.

ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறார்களின் குணநலன்களையும் அவர்களை வழிநடத்துவதற்கான முறைகளையும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சுமார் 90 பேர் கலந்து கொண்டனர். இத்தகைய பிரத்தியேகச் சிறார்களை பராமரிப்பதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அனுபவங்களை இத்துறையில் அனுபவம் வாய்ந்த பேச்சாளர்களான ரோஸி மற்றும் ரூத் ஆகியோர் பகிர்ந்து பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த ஆட்டிஸம் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட செந்தோசா தொகுதி சுக்கா உறுப்பினர்கள், ஆசியர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வினை ராஜேஸ்வரி ராமன் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.

மதியிறுக்கம் எனப்படும் இந்த ஆட்டிஸம் ஒரு நோயாக அல்லாமல் குறைபாடாக கருதப்படுகிறது. மூளைத் தகவல்களைப் பயன்படுத்தி புரிந்து கொள்ளும் திறனைத் தடுப்பது ஆட்டிஸம் எனப்படுகிறது.

பார்த்தல், கேட்டல் போன்ற உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப் போவது இந்த குறைபாட்டின் அறிகுறியாகும்.


Pengarang :