NATIONAL

சிலாங்கூர் அரசின் வான் கண்காட்சி செப்டம்பரில் நடைபெறும்- வெ.200 கோடி முதலீட்டை ஈர்க்கத் திட்டம்

ஷா ஆலம், மார்ச் 21- மூன்றாவது சிலாங்கூர் வான் கண்காட்சி வரும்
செப்டம்பர் 7 முதல் 9 வரை நடைபெறும். இந்தக் கண்காட்சியின் வழி 200
கோடி வெள்ளி வரையிலான முதலீட்டு வாய்ப்புகளை கவர
திட்டமிடப்பட்டுள்ளது.

சுபாங், ஸ்கைபார்க் வட்டார வான் போக்குவரத்து மையத்தில் (ஸ்கைபார்க்
ஆர்.ஏ.சி.) நடைபெறவிருக்கும் இந்த கண்காட்சியில் 12,000
வருகையாளர்களையும் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 50
கண்காட்சியாளர்களையும் ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

வான் போக்குவரத்து துறை சார்ந்தவர்களைக் சந்திப்பதன் மூலம்
அத்துறையை முக்கியத் தளமாக நாட்டில் விரிவுபடுத்துவதற்குரிய
வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

நாட்டின் வான் போக்குவரத்து சார்ந்த 67 விழுக்காட்டுத் துறைகள்
சிலாங்கூரை இருப்பிடமாக கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இந்த கண்காட்சியின் போது விமானக் கண்காட்சி, வர்த்தக வலையமைப்பு,
டிரோன், ஆய்வரங்கு ஆகியவற்றோடு ஹெலிகாப்டரில் சொகுசு பயணம்
மேற்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

இது தவிர, டிரோன் சாதனத்தைக் கையாள்வது, விமானப் பணிப்பெண்
உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் தொடர்பான கல்வித் திட்டங்களுக்கும்
இந்த கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு நடைபெற்ற எஸ்.ஏ.எஸ். 2023 வான் கண்காட்சி தொடர்பான
செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை இந்த கண்காட்சியில் அதிகமான வான் போக்குவரத்துத்
துறையினர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படும் வேளையில் பல்வேறு

ரகங்களைச் சேர்ந்த 40 விமானங்களும் காட்சிக்கு வைக்கப்படும் என அவர்
கூறினார்.


Pengarang :