NATIONAL

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 122 ஊழியர்களுக்குச் சிறந்த சேவைக்கான விருது

ஷா ஆலம், மார்ச் 22- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 122 ஊழியர்கள் 2022 ஆம் ஆண்டின் சிறந்த சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

மேலும் 24 பேர் சிறந்த சேவைக்கான சிறப்பு விருதினைப் பெற்றனர். இவர்களுக்கு நற்சான்றிதழ், 400 வெள்ளிக்கான சேமிப்பு பத்திரம் வழங்கப்பட்டது. டத்தோ பண்டார் சிறப்பு சேவை விருதைப் பெற்ற மேலும் இருவர் சான்றிதழ், பட்டயம், 4,000 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றை பெற்றனர்.

சிறந்த சேவையாளர் விருதைப் பெற்ற பணியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட டத்தோ பண்டார் டாக்டர் நோர் புவாட் அப்துல் ஹமிட், இந்த விருது சேவையில் சிறந்து விளங்குவதற்குரிய உந்து சக்தியை மற்றவர்களுக்கும் வழங்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்கள் என்ற முறையில் நாம் இந்த சாதனையுடன் திருப்தி அடைந்து விடக்கூடாது. மாறாக, சுற்றுச்சூழல் மாற்றத்திற்கேற்ப இன்னும் துடிப்புடன் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த விருதைப் பெற்றதன் மூலம் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தங்களுக்கு இடப்பட்ட பொறுப்புகளை மேலும் திறனுடன் செயல்படுத்தும் அதேவேளையில் சமுதாயத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ,வில் நேற்றிரவு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த சேவை விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மாற்றங்களை எதிர் கொள்வதற்கு ஏதுவாக மாநகர் மன்ற ஊழியர்கள் தங்களின் திறனையும் அறிவாற்றலையும் தொடர்ந்து மேம்படுத்தி வர வேண்டும் என்பதோடு உயர்நெறியும் திறந்த மனப்போக்கும் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.


Pengarang :