NATIONAL

தூய்மையற்ற 42 உணவங்களை மூட சிலாங்கூர் சுகாதாரத் துறை உத்தரவு

ஷா ஆலம், மார்ச் 22- சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை மேற்கொண்ட சோதனைகளில் தூய்மையின்றி செயல்பட்ட 42 உணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டன.

இந்த உணவகங்களில் எலி, கரப்பான் பூச்சி மற்றும் ஈக்கள் மிகுந்த காணப்பட்டதைத் தொடர்ந்து அவ்வுணவகங்களுக்குத் தரமதிப்பு குறைப்பு செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாஹரி ஙகாடிமான் கூறினார்.

மாநிலத்திள்ள ஒன்பது மாவட்ட சுகாதார அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்பிரிவு மேற்கொண்ட தூய்மை உணவகச் சோதனை (ஓ.பி.பி.) நடவடிக்கையின் போது அந்த உணவகங்களை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

உணவு மாசுபடுவதற்கு காரணமாக விளங்கும் சூழல்களிலிருந்து உணவகங்கள் விடுபட்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

கடந்த ஜனவரி தொடங்கி மார்ச் 15 வரை மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் மொத்தம் 673 உணவகங்கள் சோதனையிடப்பட்டன. அவற்றில் மோசமான நிலையில் காணப்பட்ட 42 உணவகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தவிர 2009ஆம் ஆண்டு உணவுத் தூய்மை விதிமுறைகளின் கீழ் 287,200 வெள்ளி மதிப்புள்ள 426 32பி அபராத அறிக்கைகள் உணவக உரிமையாளர்களுக்கு வெளியிடப்பட்டன என்றார் அவர்.

தங்கள் உணவகங்களும் அதில் விற்கப்படும் உணவுகளும் 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்திற்கேற்ப தரமாக உள்ளதை உறுதி செய்யும்படி மாநிலத்திலுள்ள அனைத்து உணவக உரிமையாளர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :