SELANGOR

அமைச்சர்: இரயில் நிலையங்களில் மின்தூக்கி வசதி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்

புத்ராஜெயா, மார்ச் 21 – இரயில் நிலையங்களில் ஒரு வருடக் காலத்திற்குள் மின்தூக்கி பொருத்தப்பட வேண்டும், இன்னும் இந்த வசதி இல்லாதப் பெரிய இரயில் நிலையங்களுக்கு முதல் கட்டத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

இன்னும் இந்த வசதி இல்லாத நிலையங்களில்  மின்தூக்கிகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று இரயில்வே அசெட்ஸ் கார்ப்பரேஷன் (ஆர்.ஏ.சி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஏனெனில், இரயில் நிலையங்களில்  மின்தூக்கி   வசதி இல்லாததால், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாவதாக அடிக்கடி பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

“இன்னும்   மின்தூக்கி   வசதி இல்லாத இரயில் நிலையங்களுக்கு, ஒரு வருடத்திற்குள் இந்த வசதியைப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று ஆர்.ஏ.சி ஆல் உருவாக்கப்பட்ட ரயில்வே அசெட்ஸ் இன்டலிஜென்ஸ் சிஸ்டம் (RAILS) மொபைல் செயலியை இன்று இங்கு அறிமுகப்படுத்தியபோது கூறினார்.

வசதிகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நிலையங்கள் குறித்து அமைச்சகத்திடம் அவசரமாகச் சமர்ப்பிப்பதற்காக, கெரேதாபி தனா மலாயு பி.எச்.டி (KTMB) உடன் இணைந்து அறிக்கையைத் தயாரிக்குமாறு ஆர்.ஏ.சி க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக லோக்  கூறினார்.

ஆர்.ஏ.சி  தனது  சொத்துக்களின் வாடகை வருவாயைக்  கொண்டு, இரயில் நிலையங்களில் வசதிகளை   மேம்படுத்துவதற்கான திறனும்,   நிதி  ஆற்றலும் கொண்டுள்ளது என்றார்.

பொதுமக்கள் ஆர்.ஏ.சி இன் வணிகப் பங்காளிகளாக ஆவதை எளிதாக்க, ரயில்ஸ் செயலி ஆன்லைன் இரயில்வே சொத்துக்களை வாடகைக்குக் கொடுக்கும் விண்ணப்பங்களை வழங்குகிறது என்று லோக் கூறினார்.

சுமார் 1,300 வாடகைதாரர்கள் ஆர்.ஏ.சி உடன் வணிகம் செய்ய ரயில்ஸ் ஐப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இதனால் சேகரிப்பு முகவர்கள் மற்றும் அதிகாரத்துவச் சிவப்பு நாடா பிரச்சனை தீர்க்கப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :