SELANGOR

மாநில அரசின் இலவசக் காப்புறுதித் திட்டத்தில் 10 லட்சம் மாணவர்கள் இயல்பாகப் பதிவு

ஷா ஆலம், மார்ச் 22- சிலாங்கூர் மாநில அரசின் இலவசப் பொது காப்புறுதித் திட்டத்தில் (இன்சான்) மாநிலத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் இயல்பாக பதிவு பெற்றுள்ளனர்.

தனியார் பள்ளிகள் உள்பட மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் படிவம் வரையிலான மாணவர்களுக்கான காப்புறுதி பிரீமியத் தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கல்வியமைச்சர் மற்றும் மாநில கல்வி இலாகாவுடன் மாநில அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்குரிய சாத்தியம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

பள்ளி செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் மாநில அரசின் செலவில் காப்புறுதிப் பாதுகாப்பை வழங்க வகை செய்யும் மலேசியாவின் ஒரே திட்டமாக இந்த இன்சான் திட்டம் விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்துக் குழு காப்புறுதி மாநிலத்தில் வசிக்கும் பிறந்து 30 நாள் ஆன குழந்தை முதல் 80 வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குகிறது. இத்திட்டத்திற்கு உண்டாகும் செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது என அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இந்த காப்புறுதித் திட்டம் 6,000 கோடி வெள்ளி மதிப்பைக் கொண்டுள்ளது. விபத்தின் காரணமாக உயிரிழப்போரின் குடும்பத்தினர் மற்றும் நிரந்தர முடத்தன்மைக்கு ஆளாவோருக்கு இந்த இத்திட்டத்தின் வாயிலாக 10,000 வெள்ளி வரை இழப்பீடு வழங்கப்படும்.


Pengarang :