NATIONAL

டிரெய்லர் லோரியின் சக்கரத்தில் சிக்கி மாணவி மரணம்- பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது நேர்ந்த துயரம்

ஷா ஆலம், மார்ச் 22- பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது டிரெய்லர் லோரி ஒன்றினால் மோதப்பட்டு ஒன்பது வயது சிறுமி உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் கோலக் கிள்ளான், கம்போங் தெலுக் கோங்கில் இன்று காலை நிகழ்ந்தது.

இந்த விபத்து குறித்து காலை 11.25 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் மோர்னி மாமாட் கூறினார்.

இந்த விபத்து நிகழ்ந்த போது அந்த மாணவி தன் பராமரிப்பாளருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார். அந்த 54 வயது பராமரிப்பாளர் பாதிக்கப்பட்ட மாணவியையும் 7 வயது சிறுவன் ஒருவனையும் ஏற்றிக் கொண்டு பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் டிரெய்லர் லோரியுடன் மோதியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் பராமரிப்பாளரான பெண்மணியும் சிறுவனும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். ஆனால் அச்சிறுமி லோரியின் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்தார் என்றார் அவர்.

அச்சிறுமியின் உடல் லோரியின் சக்கரத்திலிருந்து மீட்கப்பட்டு பரிசோதனைக்காகக் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.


Pengarang :