SELANGOR

காசநோயாளிகளுக்கான சிறப்பு நிதி ஊக்கத் தொகைக்காக RM2 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 25: மாநிலத்தில் மொத்தம் 903 காசநோயாளிகளின் (டிபி) சிகிச்சை நிறைவடைய உதவும் வகையில் கடந்த ஆண்டில் RM800 உதவியைப் பெற்றுள்ளனர்.

சுகாதார விவகாரங்கள் எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மஹ்மூத், நோயாளிகளின் பணச் சுமையை எளிதாக்குவதற்காகச் சிகிச்சை முழுவதும் ஊக்கத்தொகைகள் கட்டம் கட்டமாக வழங்கப்படுகின்றன என்று விளக்கினார்.

மருத்துவமனைகள், சுகாதார கிளினிக்குகள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள தனியார் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெறும் சிலாங்கூரில் வசிக்கும் எந்த ஒரு நோயாளியும் இந்த வசதிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என்று அவர் கூறினார்.

“மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை அமர்வுகளையும் நோயாளிகள் முடிப்பதை உறுதி செய்வதோடு கூடுதலாக ஏற்படும் சிகிச்சை செலவினங்களின் சுமையைச் சிறிது குறைக்க முடியும்” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

2020 முதல், மாநில அரசு காசநோயாளிகளுக்கான சிறப்பு நிதி ஊக்கத் தொகைக்காக RM2 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. முதல் இரண்டு மாதங்களில் RM200 உதவியும் அடுத்த இரண்டு மாதங்களுக்கும் (RM200) மற்றும் இறுதி சிகிச்சை (RM400) வழங்கப்படும்.

காச நோயால் பாதிக்கப் பட்டுள்ள எந்த ஒரு தனிநபரும் அல்லது குடும்ப உறுப்பினரும் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார் டாக்டர் சித்தி மரியா.

“மருத்துவரின் ஆலோசனையையும், சிகிச்சையையும் கடைப்பிடிப்பதில் ஒழுக்கத்துடன் செயல்படும் நோயாளிகள் மூலம் காசநோய் இல்லாத சமுதாயத்தை நோக்கி முன்னேறுவது சாத்தியமற்றது அல்ல என்றார்.

“உங்கள் அன்புக்குரியவர்கள் காசநோயின் அபாயங்களிலிருந்து பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறவும்” என்று அவர் கூறினார்.

மேலும் தகவலுக்கு, www.selangorprihatin.com/insentifrawatantibi ஐப் பார்வையிடவும் அல்லது 24 மணிநேர அழைப்பு மையத்தை 1800-22-6600 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :