NATIONAL

மாநிலத்தில் அமைதியை உறுதிசெய்வதில் பாதுகாப்புத் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு அவசியம்- மந்திரி புசார்

ஷா ஆலம், மார்ச் 27- மாநிலத்தில் அமைதியை உறுதி செய்வதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்டத் துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே அணுக்கமான ஒத்துழைப்பு நிலவுவது அவசியமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் அமைதியும் சுபிட்சமும் நிறைந்த மாநிலமாகத் தொடர்ந்து விளங்குவதற்கு ஏதுவாக பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

நான் எப்போதும் கூறுவது போல் சிலாங்கூர் ஆபத்துக்கான சாத்தியம் நிறைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தைப் பாதுகாப்பதில் தோல்வி கண்டால் நாடு முழுவதும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். காரணம், சிலாங்கூர் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மற்றும் கல்வி மையமாகவும் நாட்டின் பிரதான நுழைவாயிலாகவும் விளங்கி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, அனைத்து தரப்பினரின் அணுக்கமான ஒத்துழைப்பும் ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பாங்கும் மிக முக்கியம் என அவர் தெரிவித்தார். நேற்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.

அண்மைய மூன்று அல்லது ஆண்டுகளாக கடுமையான அரசியல் மோதல்கள் இருந்த போதிலும் நாட்டில் எந்தவொரு குழப்பமும் கலவரமும் இன்றி மிகவும் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடந்ததையும் அவர் தமதுரையில் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புக் குழுவினர் மற்றும் சீருடைப் படையினர் விஷயத்தில் மாநில
அரசு எந்தவொரு சமசரமும் செய்து கொள்ளாமல் தனது கடப்பாட்டை
நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.


Pengarang :