NATIONAL

பொருள் விலை, உதவித் தொகை விவகாரங்கள் மீது மக்களவையில் இன்று விவாதம்

கோலாலம்பூர், மார்ச் 27- பொருள் விலை, நிர்ணயிக்கப்பட்ட
தரப்பினருக்கான மானியம் மற்றும் உணவு பாதுகாப்பு உத்தரவாதம் ஆகிய
விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முக்கிய இடம் பெறும்.

கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி பிரதமர் அறிவித்த இலக்கு
நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினருக்கான உதவித் தொகை குறித்து புத்ராஜெயா
உறுப்பினர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கேள்வியெழுப்புவார் என்று
நடாளுமன்ற அகப்பக்கம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டம் அமலாக்கம் கண்டவுடன்
பொருள்களின் விலை உயர்வு காணாது என்ற உத்தரவாதத்தை அரசாங்கம்
அளிக்குமா? என்று அவர் இன்றைய கேள்வி நேரத்தின் போது விளக்கம்
கோருவார்.

கடந்த 2018 முதல் 2022 வரை இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்
பொருள்களின் அளவு குறித்து லாபிஸ் ஹராப்பான் உறுப்பினர் பாங்
ஹோக் லியோங் விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சரிடம்
வினா தொடுப்பார். நாட்டில் உணவு பாதுகாப்பு உத்தரவாதம் மற்றும்
தரத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்
கேள்வியை எழுப்புவார்.

ஒரு இனம் அல்லது மதம் இழிவுபடுத்துப்படுவதற்கு எதிராக பாகுபாடான
முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அனைத்து இனங்களின்
நலன்களையும் காப்பதற்கு மடாணி அரசாங்கம் எத்தகைய
நடவடிக்கையை எடுக்கும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.
கணபதிராவ் வினவுவார்.

இன மற்றும் மதங்களுக்கு எதிரான இழிவுபடுத்தும் செயல்களுக்கு முற்றுப்
புள்ளி வைக்கப்படுவதை உறுதி செய்வதில் மடாணி அரசாங்கம்
நடுநிலையாக செயல்படுமா? என்றும் அவர் கேள்வி தொடுப்பார்.


Pengarang :