NATIONAL

சிப்ஸ் 2023 மாநாட்டின் வழி வெ.150 கோடி விற்பனை வாய்ப்புகளைப் பதிவு செய்ய சிலாங்கூர் திட்டம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28- வரும் அக்டோபர் மாதம் 19 முதல் 22 வரை
நடைபெறவிருக்கும் சிப்ஸ் எனப்படும் 2023ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர்
அனைத்துலக வர்த்தக மாநாட்டின் வழி 150 வெள்ளி மதிப்புள்ள விற்பனை
வாய்ப்புகளை பதிவு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த
நான்கு நாள் மாநாட்டில் இடம் பெறும் ஆறு பிரதான நிகழ்வுகளின்
வாயிலாக இந்த விற்பனை வாய்ப்புகளைப் பெற முடியும் என
கணிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற வர்த்த மாநாடுகளின் அடைவு
நிலையின் அடிப்படையில் பார்க்கையில், உணவு மற்றும் பான வகைகள்
தொடர்புடைய சிலாங்கூர் அனைத்துலகக் கண்காட்சி சிலாங்கூர்
தொழில்துறை பூங்கா கண்காட்சி மற்றும் சிலாங்கூர் அனைத்துலக
மருத்துவக் கண்காட்சி ஆகியவை அதிக முதலீட்டு வாய்ப்புகள் உள்ள
துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் விவேக நகர மற்றும் இலக்கவியல் பொருளாதார
கண்காட்சியும் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கின. அதன்
அடிப்படையில இவ்வாண்டும் அதே வாய்ப்புகளை பெற முடியும் என
நம்புகிறோம் என்று அவர் தெங் மேலும் சொன்னார்.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஷெரட்டோன் ஹோட்டலில் நேற்று
நடைபெற்ற சிப்ஸ் 2023 தொடக்க விழா மற்றும் இஃப்தா நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக உச்சநிலை மாநாடாக விளங்கும் இதில்
இம்முறை சுமார் 70 நாடுகளிலிருந்து 50,000 வர்த்தகம் சார்ந்த வருகையாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :