SELANGOR

நீர் சேமிப்பு ஆற்றலை அதிகரிப்பீர்- மாநிலங்களுக்கு ஸ்பான் தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28- கடுமையான சீதோஷண நிலையை
எதிர்கொள்வதற்கு ஏதுவாக அதிகமான நீரை சேமித்து வைப்பதற்கான
வசதிகளை செய்வதில் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்
என்று ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின்
தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சார்ல்ஸ் சந்தியாகோ
கூறினார்.

அதே சமயம், நீரை மறுசுழற்றி செய்யும் பணியை மேற்கொள்ளும்
தரப்பினருக்கு ஊக்குவிப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்
சொன்னார்.

வரும் ஜூலை மாதவாக்கில் நாடு கடுமையான வறட்சி நிலையை
எதிர்நோக்கும் என்று வானிலை நிபுணரான ரம்ஸா டம்புல் கூறியுள்ளது
தொடர்பில் சார்ல்ஸ் இவ்வாறு கருத்துரைத்தார்.

மலேசியாவும் இந்தோனேசியாவும் இவ்வாண்டில் நீண்ட வறட்சி
நிலையை எதிர்நோக்கும் என்றும் இதனால் காட்டுத் தீ போன்றச்
சம்பவங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சபா மேம்பாட்டு
ஆய்வுக் கழகத்தின் தலைவரான ரம்ஸான் கணித்துள்ளார்.

இத்தகைய சூழல் ஏற்படும் பட்சத்தில் மக்களின் அன்றாடத் தேவைக்கும்
தீயை அணைப்பதற்கும் கூடுதலாக நீர் தேவைப்படும் என்று சார்ல்ஸ்
சொன்னார்.

உபரி நீரைச் சேகரிக்கும் திட்டத்தின் மூலம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த
முடியும். அதே சமயம் சேகரிக்கப்படும் நீரை வறட்சி காலத்தின் போது
பயன்படுத்தலாம் என அவர் எப்.எம்.டி. க்கு அளித்த பேட்டியில்
தெரிவித்தார்.

நீரின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு ஏதுவாக நீர் மறுசுழற்றி முறையை
அமல் செய்யும் தொழில்துறைகளுக்கு அரசாங்கம் ஊக்குவிப்புச்
சலுகைகளை வழங்கலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ், கடந்த மார்ச்
20ஆம் தேதி தேசிய நீர் ஆணையத்தின் தலைவராக மீண்டும்
நியமிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு பக்கத்தான் ஆட்சியின் போது
அவர் இப்பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :