SELANGOR

நீர் விநியோக முறையை மேம்படுத்த 3,500 கோடி வெள்ளி- ஆயர் சிலாங்கூர் ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 30- நீர் விநியோக முறையை மேம்படுத்துவதற்காக
ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தனது வர்த்தகத் திட்டத்தில் 3,500 கோடி
வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஐந்து முதல் முப்பது ஆண்டுகள் வரையிலான காலக்கட்டத்தில்
அமல்படுத்தப்படக்கூடிய இந்த திட்டத்தின் வாயிலாக சுமர்ர் 90 லட்சம்
பயனீட்டாளர்கள் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராசாவ் மற்றும் லங்காட் டுவா போன்ற புதிய நீர் விநியோகத்
திட்டங்களை அமல்படுத்துவது, பழைய குழாய்களை மாற்றுவது,
மீட்டர்களை மாற்றுவது, பம்ப் ஹவுஸ் எனப்படும் நீர் இறைப்பு இயந்திர
நிலையங்களைத் தரம் உயர்த்துவது போன்றப் பணிகளை இத்திட்டம்
உள்ளடக்கியுள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் இடைக்கால
தலைமைச் செயல்முறை அதிகாரி இஞ்சினியர் அபாஸ் அப்துல்லா
கூறினார்.

இது 2023ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய ஒதுக்கீடாகும். 1,200 கோடி
வெள்ளி மதிப்பிலான நீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டங்கள் மீது நாங்கள்
கவனம் செலுத்துகிறோம். இது தவிர, குழாய்களை மாற்றுவதற்கு
ஒவ்வோராண்டும் 15 கோடி வெள்ளியும் மீட்டர்களை மாற்றுவதற்கு 4.5
கோடி வெள்ளியும் பம்ப் ஹவுஸ் மற்றும் நீர் சுத்கரிப்பு குளத்தை தரம்
உயர்த்துவதற்கு 1.5 கோடி வெள்ளியும் செலவிடவுள்ளோம் என அவர்
தெரிவித்தார்.

இன்று ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் இடம் பெற்ற எஜெண்டா
அவானி விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.

கடந்தாண்டில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் எதிர்நோக்கிய சவால்கள்
குறித்து வினவப்பட்ட போது நீர் விநியோக முறையில் பெரும்
தொகையை முதலீடு செய்தது உள்பட பல்வேறு மேம்பாட்டுத்
திட்டங்களை தாங்கள் அமல்படுத்தியுள்ளதாக அவர் பதிலளித்தார்.

தற்போது 30,000 கிலோ மீட்டர் நீள குழாய்களை நாம் கொண்டுள்ளோம்.
அவற்றில் 6,000 கிலோ மீட்டர் நீள குழாய்கள் 1970ஆம் ஆண்டுகளில்
பொருத்தப்பட்டவையாகும். அந்த குழாய்களை கடந்த 1990ஆம்
ஆண்டுகளிலிருந்து நாம் பயன்படுத்தவில்லை என்றார் அவர்.


Pengarang :