SELANGOR

வேலை வாய்ப்பு குறித்து விளக்கமளிக்க கிராமச் சமூக மையங்களுக்குத் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவு வருகை

ஷா ஆலம், மார்ச் 30- கிராமப்புறங்களில் வேலை இல்லாமல்
இருப்போருக்கு வேலை வாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கிராமச் சமூக
மையங்களுக்கு வருகை புரிய யு.பி.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர்
தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களில் பலர் வேலைக்கு விண்ணப்பம்
செய்வதற்கான வழிவகைகளை அறியாமலிருப்பதை கருத்தில் கொண்டு
கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு மற்றும் மனித வள
அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை தாங்கள்
மேற்கொள்ளவுள்ளதாக யு.பி.பி.எஸ். பிரிவின் தலைமை ஒருங்கிணைப்ளர்
எஸ்.விஜயன் கூறினார்.

இதன் அடிப்படையில் அவ்விரு அமைச்சுகளின் உதவியுடன் மாநிலம்
முழுவதும் உள்ள பி.கே.டி. மையங்களுக்குச் சென்று வேலை வாய்ப்பு
குறித்த தகவல்களை இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்
என அவர் சொன்னார்.

எனினும், இந்த திட்டம் தற்போது விவாத நிலையில் மட்டுமே
உள்ளதாகவும் அது இறுதி செய்யப்பட்டவுடன் அடுத்தக் கட்ட
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பயணத்தின் போது வேலை வாய்ப்பு குறித்து விளக்கமளிக்கும்
அதேவேளையில் ஜோக்கேர் தளம் குறித்தும் அவர்களுக்கு
விளக்கங்களைத் தருவோம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் இவ்வாண்டில் நடைபெறவுள்ள ஜெலாஜா ஜோப்கேர் எனும்
பயணத் திட்டம் குறித்தும் அவர்களுக்கு விளக்கமளிக்கும்
அதேவேளையில் அதில் பங்கேற்பதற்கும் அவர்களை ஊக்குவிப்போம்
என்றார் அவர்.


Pengarang :