SELANGOR

நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க தினசரி ஆற்று நீர் மீது லுவாஸ் சோதனை

ஷா ஆலம், ஏப் 2- நீர் ஆதாரங்கள் மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்ய ஆற்றின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான பகுதிகளில் லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் தினசரி  சோதனையை மேற்கொள்கிறது.

அதே சமயம், ஆற்று வடிநில பகுதிகளில் குறிப்பாகச் சுங்கை லங்காட் வடிநிலம், சுங்கை சிலாங்கூர் வடிநிலம் மற்றும் சுங்கை கிள்ளான் வடிநிலம் ஆகிய பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை லுவாஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஆறுகளில் கலக்கும் இரசாயனக் கழிவுகள் ஆற்று நீரை மாசுபடுத்தும் அளவுக்கு ஆபத்தானவையாக இல்லாதிருப்பதைக் உறுதி செய்யும் நோக்கில் அந்த ஆறுகளில் உள்ள நீர் மாதிரிகளை அது சோதனைக்கு உட்படுத்துகிறது.

மாநிலத்தில் உள்ள நீர் வளங்கள் மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆறுகள் மற்றும் ஆற்று வடிநில பகுதிகளில் இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அந்த வாரியம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

நீரின் தரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் எச்சரிக்கை விடுப்பது, அபராதம் விதிப்பது, பணி நிறுத்த உத்தரவு பிறப்பிப்பது, மீட்சித் திட்டங்களை அமல்படுத்துவது கொள்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தது.


Pengarang :