SELANGOR

ஆலம் மேகா சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் கேக் தயாரிக்கும் பயிற்சி- 30 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், ஏப் 3- கம்போங் பாரு ஹைக்கோம் மற்றும் ஆலம் மேகா இந்திய சமூகத் தலைவர் எம்.கோபியின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற கேக் செய்யும் பயிற்சியில் 30 பேர் கலந்து கொண்டனர்.

இங்குள்ள செக்சன் 28, ஆலம் மேகா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 வரை நடைபெற்ற இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

மகளிர் உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு கைத்தொழிலைப் பயிற்றுவிக்கும் நோக்கில் இந்த கேக் செய்யும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் கோபி தெரிவித்தார்.

தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்  கேக் செய்வதற்கான நுணுக்கங்களைத் தெளிவாக கற்றுக் கொண்டதோடு உபரி வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக இந்த தொழிலை பகுதி நேரமாக கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான வீ. கணபதிராவ் ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு இந்தியச் சமூகத் தலைவருக்கான மானியத்தில் இருந்து சுமார் 5,000 வெள்ளி செலவிடப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

கேக் தயாரிப்பு, சேலை கட்டுவது, மருதாணி போடுவது, மாலை தொடுப்பது உள்ளிட்ட பல திறன் பயிற்சிகளை  இவ்வட்டார மக்களுக்கு ஏற்கனவே நாங்கள் நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாநில அரசின் மானியத்தில் நடத்தப்படும் இத்தகைய இலவசப் பயிற்சி திட்டங்களில் மேலும் அதிகமானோர் பங்கேற்று பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :