NATIONAL

மாற்றுத் திறனாளி செனட்டருக்காக ஒற்றைக் காலில் ஒரு நிமிடம் நின்ற மேலவை உறுப்பினர்கள்

கோலாலம்பூர், ஏப் 3- மாற்றுத் திறனாளியான செனட்டர் ஈசையா
ஜேக்கப்பிற்கு தங்களின் ஆதரவைப் புலப்படுத்தும் விதமாக மேலவையில்
இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஒரு நிமிடம் ஒற்றைக் காலில்
நின்றனர். செனட்டர்களின் இந்த செயல் அவையில் உணர்ச்சிகரமான
சூழலை உருவாக்கியது.

அவையில் 2023ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா மீதான
விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றிய ஒரு காலை இழந்தவரான
ஈசையா, விவாதத்தை முடிக்கும் தறுவாயில் மாற்றுத் திறனாளிகளின்
நலன் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு
அனைத்து உறுப்பினர்களும் ஒற்றைக் காலில் நிற்குமாறு கேட்டுக்
கொண்டார்.

இந்த விவாதத்தின் போது நான் 14 நிமிடம் 15 விநாடிகள் நின்றவாறு
பேசினேன். நாங்கள் ஆற்றல்மிகுந்தவர்கள். நான் ஒரு விஷயத்தைக் கூறி
உரையை முடிக்க விரும்புகிறேன். மேலவை சபாநாயகர் உள்பட
அனைவரும் எழுந்து ஒரு நிமிட நேரம் ஒற்றைக் காலில் நிற்குமாறு
கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறி அமர்ந்தார்.

செனட்டர் ஈசையாவுக்கு தங்களின் ஆதரவைப் புலப்படுத்தும் விதமாக
அனைத்து உறுப்பினர்களும் ஒரு நிமிடம் ஒன்றைக் காலில் நின்றனர்.

முன்னதாக அவையில் உரையாற்றிய போது மாற்றுத் திறனாளிகள்
(ஓ.கே.யு.) என்பதற்கு பதிலாகப் பிரத்தியேகத் தரப்பினர் என்ற சொல்
பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதோடு மாற்றுத்
திறனாளிகள் விவகாரங்களைக் கவனிக்க சிறப்புக் குழு பிரதமர் துறையின்
கீழ் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்.


Pengarang :