NATIONAL

காவல்துறை அதிகாரி மிரட்டியதாகச் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ தொடர்பாக  விசாரணை

கோலாலம்பூர், ஏப்ரல் 4: இங்குள்ள டத்தோ ஓன் சாலை ரவுண்டானாவில்  ஒரு நபரை காவல்துறை அதிகாரி மிரட்டியதாகச் சமூக ஊடகங்களில்  பரவிய செய்தி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை அறிக்கையை திறந்தனர்.

கோலாலம்பூர் காவல்துறையின் செயல் தலைவர் டத்தோ யாஹாயா ஓத்மான், டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுத் துறை, சம்பந்தப்பட்ட நபர் மற்றும் காவல்துறை அதிகாரியை அடையாளம் கண்டுள்ளது என்றும் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 384 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணை ஆவணங்கள் மேல் நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். .

யாஹாயாவின் கூற்றுப்படி, ஆரம்ப விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லாததற்காகக் காவல்துறை அதிகாரியால் அச்சுறுத்தப் பட்டதாகக் கூறியது கண்டறியப்பட்டது.

உண்மையான ஆதாரங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களைப் பொதுமக்கள் எளிதில் நம்ப வேண்டாம் என்றும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்த நபர்கள் டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை 03-2600 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, டத்தோ ஓன் எனும் இடத்தில் முழு சீருடையில் காவல்துறை அதிகாரி ஒரு நபரைச் சோதனை செய்வதைக் காட்டும் ஒரு நிமிடம் 48 வினாடிகள் நீடிக்கும் வீடியோ டிக்டோக் பயன்பாட்டில் வைரலானது.

– பெர்னாமா


Pengarang :