SELANGOR

புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைக்க எம்.பி.ஐ. வெ.300,000 ஒதுக்கீடு

சுபாங் ஜெயா, ஏப் 10- நேற்று முன்தினம் வீசிய கடும் புயல் காரணமாக
சேதமடைந்த 122 வீடுகளில் ஒரு பகுதியைச் சீரமைக்க எம்.பி.ஐ.
எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் 300,000 வெள்ளியை ஒதுக்கீடு
செய்துள்ளது.

பூச்சோங் மற்றும் சிப்பாங் வட்டாரத்தின் 60 பகுதிகளில் உள்ள இந்த
வீடுகள் சீரமைப்புக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட தரை வீடுகளை புனரமைக்கும்
பணியை எம்.பி.ஐ. மேற்கொள்ளும். அதேவேளையில் அடுக்குமாடி
குடியிருப்புகளைச் சீரமைக்கும் பொறுப்பினை ஊராட்சி மன்றங்கள் ஏற்கும்
என்று அவர் தெரிவித்தார்.

இப்பணியை மேற்கொள்வதற்கான குத்தகையாளரை ஊராட்சி மன்றங்கள்
நியமிக்கும். இதற்கான நிதியும் முன்கூட்டியே வழங்கப்படும். பிரதமர்
நேற்று முன்தினம் அறிவித்த 3.5 கோடி வெள்ளி மக்கள் வீடமைப்பு
நிதியிலிருந்து இதற்கான ஒதுக்கீடு பெறப்படும் என்றார் அவர்.

இங்குள்ள யுஎஸ்ஜே 4 ரமலான் சந்தையில் பிளாட்பார்ம் சிலாங்கூர்
ரஹ்மா பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் நிகழ்வுக்கு தலைமை
தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்கும் பணி அடுத்த பத்து நாட்களில்
அதாவது நோன்பு பெருநாளுக்கு முன்னர் பூர்த்தியடையும் என்றும் அவர்
தெரிவித்தார்.


Pengarang :