NATIONAL

மாநில அரசின் கல்வி நிதித் திட்டத்தின் கீழ் 7,654 குழந்தைகளுக்கு வெ.100 சேமிப்பு நிதி

ஷா ஆலம், ஏப் 10- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்தாண்டு முதல்
இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பிறந்த 7,654 குழந்தைகள் மாநில அரசின்
கல்வி நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 வெள்ளி வீதம்
ஐந்தாண்டுகளுக்குச் சேமிப்பு நிதியைப் பெறுவர்.

இல்திஸாம் அனாக் சிலாங்கூர் (அனாஸ்) எனும் இத்திட்டத்தின் கீழ்
இவ்வாண்டு இறுதி வரை மேலும் 20,000 குழந்தைகள் பதிவு செய்வதற்கு
வாய்ப்பு உள்ளதாக யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர்
அறவாரியத்தின் வர்த்தகப் பிரிவு துணை நிர்வாகி ஷரிசான் முகமது
ஷாரிப் கூறினார்.

இத்திட்டத்திற்குக் கடந்தாண்டு ஆகஸ்டு முழுவதும் 11,712
விண்ணப்பங்களைப் பெற்றோம். அவற்றில் 7,654 விண்ணப்பங்கள் மட்டுமே
அங்கீகரிக்கப்பட்டன. அதில் 3,170 குழந்தைகளின் கணக்கில் தலா 100
வெள்ளி சேர்க்கப்பட்டு விட்டது. எஞ்சிய விண்ணப்பங்கள் தொடர்ந்து
பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள 30,000 குழந்தைகளுக்கு 500 வெள்ளியைக் கல்விச் சேமிப்புத்
திட்டத்தில் சேர்ப்பதற்காக மாநில அரசு 2023ஆம் ஆண்டு வரவு செலவுத்
திட்டத்தில் அனாஸ் முன்னெடுப்புக்கு 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு
செய்தது.

இந்த திட்டத்தில் பங்கேற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் சிலாங்கூரைச்
சேர்ந்தவர்களாகவும் இம்மாநிலத்தில் வசிப்பவர்களாகவும் இருக்க
வேண்டும் என்பதோடு மாநிலத்தில் பதிவு பெற்ற வாக்காளர்களாகவும்
இருத்தல் அவசியம்.


Pengarang :