NATIONAL

நாட்டின் வளங்களைச் சுரண்டியவர்களுக்கு எதிரானப் போராட்டத்தில் சமரசம் கிடையாது- பிரதமர்

ஈப்போ, ஏப் 11- நாட்டின் வளங்களைச் கொள்ளையடிவர்களிடமிருந்து
மக்களைக் காப்பாற்றும் விஷயத்தில் தாம் ஒருபோதும் சமரசம் செய்து
கொள்ளப்போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
சூளுரைத்துள்ளார்.

நாட்டின் கருவூலத்தையும் சொத்துகளையும் கொள்ளையிட்டு தங்களை
வளப்படுத்திக் கொண்டத் தலைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி
அரசாங்கத்திற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இது எனது வாக்குறுதி. சாதகமோ, பாதகமோ அதனை எதிர்கொள்ள நான்
தயாராக இருக்கிறேன். நான் ஊழலுக்கு எதிராகப் போராடுவதால் என்னை
வீழ்த்த எல்லா வகைகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படலாம். ஆனால்,
நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். கொள்ளையிடும்
கும்பலிடமிருந்து நாட்டை பாதுகாப்பேன் என்று அவர் மேலும் கூறினார்.

கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல. அரசாங்கத்
தலைவர்கள், அமைச்சர்கள், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இதில்
சம்பந்தப்பட்டுள்ளனர். ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, குறிப்பாக
எச்சரிக்கை விடுத்தப் பின்னரும் அத்தகைய செயல்களை தொடர்ந்து
புரிவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஊழல் தடுப்பு
ஆணையத்தை நான் பணித்துள்ளேன் என்றார் அவர்.

நேற்றிரவு இங்குள்ள அல்-இத்திஹாடியா பள்ளிவாசலில் நடைபெற்ற
நோன்பு துறக்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெர்லிஸ் மாநில முன்னாள் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்லான் மான்
மீதான் ஊழல் வழக்கில் தாம் சம்பந்தப்படவில்லை என்றும் அவர்
தெளிவுபடுத்தினார்.


Pengarang :