NATIONAL

தப்பியோடிய இரு கைதிகள் 24 மணி நேரத்தில் மீண்டும் பிடிப்பட்டனர்

ஜொகூர் பாரு, ஏப் 12- நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படும்
வேளையில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய இரு இந்தோனேசிய
கைதிகள் மீண்டும் பிடிப்பட்டனர்.

ரிக்கி ரினால்டி (வயது 40) மற்றும் சமிருடின் (வயது 36) ஆகிய இரு
கைதிகளும் தப்பியோடிய 24 மணி நேரத்தில் ஜாலான் பெல்டா ஈனாஸ்-
கூலாய் வட்டாரத்தின் இரு வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாகக்
கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் தோக் பெங்
இயோ கூறினார்.

அவ்விருவரும் 1.5 கிலோ மீட்டர் இடைவெளியில் கைது செய்யப்பட்டதாகக்
கூறிய அவர், பிடிபட்ட போது கைதிகள் உடையில் அல்லாமல்
திருடப்பட்டதாக நம்பப்படும் டி-சட்டை மற்றும் ஜீன்ஸ் உடையில்
காணப்பட்டனர் என்றார்.

நேற்றிரவு 10.35 மணியளவில் ஜாலான் பெல்டா ஈனாஸ்-கூலாய் பகுதியில்
உள்ள செங்காங் காய்கறி தோட்டத்தில் ரிக்கி கைது செய்யப்பட்ட
வேளையில் சமிருடின் அதே பகுதியில் உள்ள தாமான் சாகா காய்கறி
தோட்டத்தில் இன்று காலை 10.40 மணியளவில் பிடிபட்டார் என்று அவர்
சொன்னார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஈராண்டுச்
சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும்
குற்றவியல் சட்டத்தின் 223/224வது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :