NATIONAL

மலாய் ரிசர்வ் நிலம் வெகுவாகக் குறைந்து விட்டதா? சிலாங்கூர் மாநில அரசு செயலாளர்  மறுப்பு

ஷா ஆலம், ஏப் 13- மலாய் ரிவர்வ் நிலத்தின் அளவு வெகுவாகக் குறைந்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிலாங்கூர் அரசு வன்மையாக மறுத்துள்ளது. மாறாக, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது மலாய் ரிவர்வ் நிலத்தின் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அது கூறியது.

மலாய் ரிசர்வ் நிலத்தை தொடர்ந்து கட்டிக் காப்பதற்கும் அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கும் மாநில அரசு தொடர்ந்து அணுக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகயை மேற்கொண்டு வருவதோடு கையகப்படுத்தப்படும் ரிசர்வ் நிலம் ஈடு செய்யப்படுவதையும் உறுதி செய்து வருகிறது என மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் கூறினார்.

மெர்டேக்காவுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும்  இப்போது மலாய் ரிவர்வ் நிலத்தின் அளவு அதிகமாக உள்ளதை தரவுகள் காட்டுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி மாநிலத்தில் உள்ள மலாய் ரிசர்வ் நிலத்தின் அளவு 162,508.97 ஹெக்டராக உள்ள வேளையில் கடந்த 1948 ஆம் ஆண்டில் இதன் அளவு 125,845 ஹெக்டராக மட்டும் இருந்தது என அவர் குறிப்பிட்டார்.

கையகப்படுத்தல் மற்றும் ஈடு செய்தல் போன்ற காரணங்களால் கடந்த காலங்களில் மாநிலத்திலுள்ள மலாய் ரிசர்வ் நிலங்களின் அளவு ஏற்ற இறக்கம் கண்டு வந்துள்ளது. விமான நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், நெடுஞ்சாலை போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கு அந்நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்று அவர் விளக்கினார்.

மலாய் ரிசர்வ் நிலங்களின் அளவு குறைந்து விட்டதாக சிலாங்கூர் மாநில பாஸ் கட்சியின் ஆணையர் டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி சுமத்திய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இத்தகவலை வெளியிட்டார்.


Pengarang :