NATIONAL

சபா ஏர் “டபுள் சிக்ஸ்“ விமான விபத்துக்கு சதிநாசச் செயல் காரணமல்ல

கோலாலம்பூர், ஏப் 13- சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்னர் சபா மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் துன் புவாட் ஸ்டீபன்ஸ் மற்றும் பல அமைச்சர்கள் உயிரிழப்பதற்கு காரணமான சபா ஏர் விமான விபத்துக்கு சதிநாசச் செயல், தீவிபத்து அல்லது வெடிப்பு காரணமல்ல எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 1976ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை இரகசிய ஆவணமாக இத்தனை ஆண்டுகள் வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அண்மையில் அதனைப் பகிரங்கப்படுத்த அரசாங்கம் முடிவெடுத்தது.

விமானத்தின் ஈர்ப்பு மையம் வரம்பு நிலைக்கு வெளியே சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக நேற்று பொது பார்வைக்கு வெளியிடப்பட்ட 21 பக்க விசாரணை அறிக்கை கூறியது.

இதனால் விமானம் ஓடுதளத்தை நெருங்கிய போது விமானத்தின் இறக்கையின் விசை 25 டிகிரி கடந்து விமானத்தின் மூக்கு பகுதி மேல் நோக்கிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டது என அது தெரிவித்தது.

விபத்து நிகழ்வதற்கு முன்னர் விமானத்தில் எந்தவித கோளாறும் ஏற்பட்டதற்கான அறிகுறி தென்படவில்லை. அந்த விமானம் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளதோடு இப்பேரிடர் நிகழ்ந்த போது வானிலை மோசமாக இருந்ததற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விமான விபத்து கடந்த 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி நிகழ்ந்த காரணத்தால் அது டபுள் சிக்ஸ் பேரிடர் என வர்ணிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட நோமாட் 9எம் ஏடிஇசட் எனும் அந்த சபா ஏர் நிறுவன விமானம் லபுவானிலிருந்து புறப்பட்டு கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது.


Pengarang :