NATIONAL

முக நூலில் ஆட்சியாளர்கள் அவமதிப்பு- சந்தேக நபர் விசாரணைக்குத் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், ஏப் 13- முகநூல் வாயிலாக ஆட்சியாளர்களை அவமதித்ததாகச் சந்தேகிக்கப்படும் 42 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜா ஹைருன் எனும் முகநூல் கணக்கின் உரிமையாளரான அந்த ஆடவர் பகாங், தெமர்லோவில் நேற்று கைது செய்யப்பட்டதாக அரச மலேசியப்  போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர்ஷியா முகமது சாடுடின் கூறினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117 வது பிரிவின் கீழ் அந்த ஆடவரை விசாரணைக்காகத் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி இன்று பெறப்படும் என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் டி5 எனப்படும் வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. 1998ஆம்  ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவு மற்றும் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1) பிரிவின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு முடியாட்சியை எப்போதும் பின்பற்றி நடக்கும் அதேவேளையில் ஆட்சியாளர்களின் இறையாண்மைக்கும் உரிய மரியாதை அளிக்கும்படி பொது மக்களை நோர்ஷியா அறிவுறுத்தினார்.

ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையிலும் அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கிலும் அறிக்கை விடும் தனிநபர்கள் அல்லது தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :