ANTARABANGSA

துணை இராணுவப் படைகளின் தளங்கள் மீது சூடான் இராணுவம் வான் தாக்குதல்

கார்ட்டூம், ஏப் 17- துணை இராணுவப் படையினருடனான
இரத்தக்களரிமிக்க போராட்டத்தில் முன்னோக்கி நகர்ந்து வரும் சூடான்
இராணுவம், அதன் தளங்கள் மீது வான் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் மூன்று ஐ.நா. பணியாளர்கள் உள்பட 59 பேர்
உயிரிழந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

சூடான் நாட்டின் ஆளும் இறையாண்மை மன்றத்தின் இடைக்காலத்
தலைவரான ஜெனரல் அப்துல் ஃபாத்தா அல்-புர்ஹானுக்கு விசுவாசமான
படைப்பிரிவுக்கும் ஹமிட்தி என அழைக்கப்படும் ஜெனரல் முகமது
ஹம்டான் டகாலோ தலைமையிலான துணை அதிரடி ஆதரவுப்
படைகளுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை போர் வெடித்தது.

மூத்த இஸ்லாமிய ஏதேச்சர்வாதிகாரி உமர் ஹசான் அல்-பஷிரை
வெளியேற்றுவதற்கு இவ்விரு படைகளும் கடந்த 2019ஆம் ஆண்டில்
ஒன்றிணைந்த பிறகு நிகழ்ந்த முதலாவது மோதல் சம்பவம் இதுவாகும்.

நாட்டில் சிவிலியன் ஆட்சியை ஏற்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக
துணை இராணுவப் படையை ஒருங்கிணைப்பது தொடர்பில் ஏற்பட்ட
கருத்து வேறுபாடு இந்த ஆயுதப் போராட்டத்திற்கு வழி வகுத்துள்ளது.

ஐ.நா. பரிந்துரைத்தபடி பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஏதுவாக
மூன்று மணி நேர போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்க இரு தலைவர்களும்
ஒப்புக் கொண்டனர். எனினும், அங்கு சிறிது நேரமே அமைதி நிலவிய
நிலையில் அமைதி உடன்படிக்கையை மீறும் சம்பவங்கள் ஆங்காங்கே
நிகழ்ந்த வண்ணம் இருந்தன.


Pengarang :